|
நம் புத்தூர் "ஸுதர்சநர்" ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐய்யங்கார் ஸ்வாமி (13 திசெம்பர் 2011 ) ஆசார்யன் திருவடி சேர்ந்தது நினைந்து இந்நேரத்தில் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸமூஹத்தின் முக்கிய சிந்தனையாக ஒன்று விண்ணப்பிக்கிறேன். அவர் ஸ்வாத்யாய-க்ரமத்தில் பயின்று அடைந்த உபயவேதாந்தப் புலமை இன்றைக் கால அளவில் பெறுதற்கரிது. இது காரணமாக நாம் தன்னம்பிக்கைச் செயல்பாடு இழக்காமல் மேற்கொள்ளக்கூடிய முயற்சியாக ஒன்று சொல்லலாம். அதாவது, அவருடையதே ஆன நூல்களையும் அவர் வெளியிட்ட பூர்வாசார்ய கிரந்தங்களையும் ஸ்ரீவைஷ்ணவர் ஒவ்வொருவரும் கைக்கொண்டு அவரவர் வாசித்தவாறு இருப்பதே பொழுது போக்காகக் கொண்டால் ஸ்வாமியின் சம்ப்ரதாயத் தொண்டுக்குத் தக்க நன்றிச் சிறப்பாக அமையும். நினைத்துப்பார்த்தால் நிராசை தோன்றும் இக்காலத்தில், ஸுதர்சநர் ஸ்வாமி ஸம்ப்ரதாயக் காப்பாகச் செய்து ஸமர்ப்பித்த கைங்கர்யங்கள் பலவுள. (பெரியாழ்வார் திருவெள்ளறையில் உகந்து இட்டவாறே~~ "செல்வத்தினால் வளர்பிள்ளாய்... காப்பிட வாராய் !" ~~ காப்பு சமர்ப்பித்தல் நம் ஸ்வாமி மிக விரும்பித் தனது முதல் தர்மமாகச் செயல்பட்ட துறை ஆகும்.) இன்றைய நிலையில் பொய்ந்நூலையே மெய்ந்நூலென்று பணபலமும் ப்ரசாரபலமும் பரவியுள்ளதைக் காணலாம். "பிபேதி அல்ப-ச்ருதாத் வேத: மாம் அயம் ப்ரதரிஷ்யதி" [ बिभेत्यल्पश्रुताद्वेद: मामयं प्रतरिष्यति , வேதமானது கல்விக்குறையுள்ளவன் என்னைப் பொருள்திரித்துப் பேசுவானே, The semiliterate is given to subverting the Scripture, என அஞ்சுகிறது ! ] இந்த அடிப்படையிலே தான் திருமால் சந்நிதிகளில் வேதத்துக்கு வித்தான திருப்பாவைக்கு இணைத்து திருவெம்பாவைக் கூட்டம் போட்டதைத் தீர்மானமாகத் தடுத்து நிறுத்தினது நம் ஸ்வாமியின் தனிப் பெருமையாகும். சங்கரரும் வைஷ்ணவமும் எனும் நூலில், ஷட்-தர்சநம் (அறுசமயம் ~ cf Max Mueller's Six Systems of Indian Philosophy ) எனுமிடத்தில் வந்தமர்ந்த ஷண்மதம் எனும் போலியை வெளிப்படுத்தினதும் முக்கிய அறிவியல் தொண்டாகும் (intellectual accomplishment). இவ்வாறே, ஒரு அரசியல் அறைகுறையாளனுக்கு மறுப்பாக அறிவுறுத்தி "கம்பனின் சமயம்" எனும் நூல் அருளி, கம்பநாட்டாழ்வார் ஒரு ஈடில்லாக் கவி மட்டுமன்றி, பரம வைஷ்ணவப் பெருந்தகை என்பதையும் நிறுவினார். (இத்தொண்டினைத் தொடர்ந்து, "அருளிச்செயல் அமுதமும் தொல்புகழ் அமுதமும்" என்ற புலமை செறிந்த நூலினைப் படைத்துள்ள ஸ்ரீ வானமாமலை வித்வான் N S கிருஷ்ணன் ஸ்வாமிக்கு சம்ப்ரதாயம் கடமைப்பட்டுள்ளது.) "சொற்கற்ற சோம்பர்" இடையின்றி ஸ்ரீவைஷ்ணவத்துக்குத் தாழ்வு பேசி நிறுவமுடியாமல், பொருள் திரித்தும், வெறும் பொய்யே புலம்பியும் செய்யும் முயற்சிகளை நிரஸித்து எழுதின ஸ்ரீவிஷ்ணுசித்த விஜயம் எனும் நூல் நம் ஸ்வாமியின் பெரும்படைப்பு (magnum opus) ஆகும். மேலும், சங்கத் தமிழினைத் திருமால்நெறியின் நறுமணம் (सुरभि नो मुखाकरत्) ஆட்கொண்ட வியப்பினை மிகவும் முறையாக எடுத்துக்காட்டியது ஸ்வாமியின் பெருந்தொண்டாகும். அருளிச்செயலுக்குப் பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை சாதித்தருளின வ்யாக்யானங்கள் இன்றும் கிடைப்பதும், அவற்றின் மணிப்ரவாளத் தொன்மொழிநடையின் சிறப்பை நாமும் நுகரும்படி இன்றைத் தமிழில் விளக்க-விவரணம் செய்ததும், ஸ்வாமியின் பரமகைங்கர்யம் ஆகும். அடியேனுக்கு காஞ்சி மஹான் ஜகதாசார்ய ஸ்ரீ உ.வே. ப்ரதிவாதி- பயங்கரம் அண்ணங்கராச்சார்ய ஸ்வாமியிடமும், ஸுதர்சநர் ஸ்வாமியிடமும் சிலநேரம் அணுகிப் பழகும் பேறு கிட்டியது "அதுவும் அவனது இன்னருளே". இத்தகைய நினைவே ("நின்று நினைக்கின்றேன்", संस्मृत्य संस्मृत्य ) நம்மைக் கரை சேர்த்து, ஊட்டமளிப்பதாக ("தாரக-போக்யமாக") அமையும். ஸ்வாமியின் ஆசார்யனான கீழைத் திருமாளிகை ஸ்ரீ உ.வே. திருவேங்கடாசார்ய ஸ்வாமி, மேலைத் திருமாளிகை ஸ்ரீ உ.வே. ஸௌம்யநாராயணாசார்ய ஸ்வாமி, பெரியகோயில் தென்னாசார்ய சபையின் செயலாளர், பரம ஸம்ப்ரதாயநிஷ்டரும் பெரியபெருமாள் அத்யாபகருமான, ஸ்ரீமான் அந்தணநல்லூர் முரளி ஸ்வாமி, இவர்கள் ஸுதர்சநர் ஸ்வாமியின் க்ரந்த ரசன-ப்ரகாசன கைங்கர்யத்தில் இடைவிடா ஸஹாயமாக ஈடுபட்டிருந்ததும் சம்பிரதாயத்துக்கு உண்டான நன்மையே. ஸுதர்சநர் ஸ்வாமி ("அநாவ்ருத்தி", यत् प्राप्य न निवर्तन्ते तद्धाम परमं मम) இன்றில்லை, இங்கில்லை, எண்ணும் எண்ணத்தை மாற்றும் வகையில் உபநிஷதங்களைச் சான்றாகச் சொல்லலாம். "அவ்வாறான அவன், இவ்வுலகிலிருந்து நீங்கி, ~~~, இவ்வுலகங்களில் விரும்பியவாறே நுகர்ந்து, விரும்பிய வடிவங்கள் கொண்டு, ஸாமம் பாடித் திரிகிறான்." [ स य एवंवित् । अस्माल्लोकात्प्रेत्य । ~~~ इमान् लोकान् कामान्नी-कामरूप्यनुसञ्चरन् । ~~~ सामगायन्नास्ते । तैत्तिरीय भृगु 10 -5 / 6 ] இவ்வாறு ஜீவன்முக்தன் இந்த லீலா விபூதியில் வந்து போவதானது கர்மவச்யர்க்குப் போன்று அல்ல என்று காஞ்சி மஹான் விளக்கியுள்ளார். "திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும், கருமணியை கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே !" என்று க்ஷணம் தோறும் திருவுறையூர் பரிஸரத்தில் உறைந்திருந்தவர் அல்லவோ நம் ஸுதர்சநர் ஸ்வாமி ? அடியேன் ராமாநுஜதாஸன் திருமஞ்சனம் சுந்தர ராஜன் (ஸ்ரீரங்கம்) |
